அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயல் காரணமாக குஜராத் மற்றும் டையூ கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு குறைந்த காற்றழுத்தம் உருவானது. இந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

மேலும் இந்த புயலுக்கு ‘டவ்-தே’ புயல் என்றும் பெயரிடப்பட்டது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கேரளாவின் வடமாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதனால் கேரளாவின் வடமாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டவ்-தே புயல் சின்னம் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் நேற்று முதல் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்த மக்கள் மீட்பு படையினர் மூலம் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே கேரள கடற்கரை பகுதியில் பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. அவை தடுப்பு சுவர்களை தாண்டி ஊருக்குள்ளும் புகுந்தது.

இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் அவரசம், அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.

மேலும் குஜராத் கடற்கரையில் போர்பந்தர் – நலியா இடையே வரும் செவ்வாய்க்கிழமை புயல் கரையைக் கடக்கும் போது 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, கோதையாற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டவ்-தே புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளமாக ஆதியோகி சிலை; சர்ச்சையால் 5 மணி நேரத்தில் திடீர் மாற்றம்