இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார்.
இந்தியாவில் பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு உள்ளன.அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி, சச்சின் டெண்டுல்கர் குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன.
தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகளும் படமாக தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில், செஸ் விளையாட்டில் முடிசூடா மன்னனாக திகழும் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக உள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆனந்த், 2000 ஆம் ஆண்டில், முதல் முறையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று சாதனை செய்தார்.
விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், சூசன் நினனுடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்கிற சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.
இந்நிலையில் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு படத்தை, பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இவர், தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு நடைபெற உள்ளது. நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சார்பட்டா பரம்பரை’ குழுவினருடன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆர்யா