சிபிஐ இயக்குநர், சிபிஐ சிறப்பு இயக்குநர் இடையே அதிகார மோதல் நிலவி வந்த நிலையில், பல கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி உள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரணை நடத்தும் குழுவின் தலைவரான ராகேஷ் அஸ்தானா, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்விவகாரத்தில் இடைத்தரகர் மனோஜ் குமார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் சமந்குமார் கோயலின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதன்மை புலனாய்வு அமைப்பான சிபிஐ அதனுடைய சிறப்பு இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்வது முன்னெப்போதும் இல்லாத சம்பவமாக பார்க்கப்பட்டாலும், ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வது அஸ்தானாவுக்கு இது முதல்முறை அல்ல.

ராகேஷ் அஸ்தானா, 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த குஜராத் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடதக்கது