சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை விட அதிக விலைக்கு ஜடேஜா தக்கவைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், இதற்கு பின் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

2022 ஐபிஎல் தொடருக்கான விறுவிறுப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கிவிட்டது. 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஜனவரி கடைசி வாரம் நடக்க உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ ரீடெயின் வாய்ப்பு அளித்தது. இதற்கான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான நிகழ்வு நேற்று (30.11.2021) மாலை நடைபெற்றது.

2022 தொடருக்கான ரிட்டென்ஷனுக்கு முன்பே தோனி சிஎஸ்கே அணியில் தொடர்வேன் என்று அறிவித்திருந்தார். அடுத்த 5 வருடங்களுக்கு கூட ஆடுவேன் என்று தோனி சென்னையில் நடந்த விழாவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் தோனி சிஎஸ்கே அணியில் மீண்டும் பல கோடிகளுக்கு ரீடெயின் செய்யப்படுவதை விரும்பவில்லை. இது அணியின் எதிர்காலத்தை பாதிக்கும். தோனியை 16 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ரீடெயின் செய்தால் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி மற்ற வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும்.

இதன் காரணமாக தோனி தன்னுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும்போது குறைந்த விலைக்கு ரீடெயின் செய்தால் போதும் என்று தோனி கூறியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

பிசிசிஐ விதிகளின்படி 4 வீரர்களை ரீடெயின் செய்தால் 42 கோடி ரூபாயை அவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். முதல் தக்கவைத்துக்கொள்ளப் போகும் வீரருக்கு 16 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அதேபோல் இரண்டாவது வீரருக்கு 12 கோடி ரூபாய், மூன்றாவது வீரருக்கு 8 கோடி ரூபாய், நான்காவது வீரருக்கு 6 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தோனி முதல் வீரராக களமிறங்க விரும்பவில்லை. முதல் இடத்தை அவர் ஜடேஜாவிற்கு விட்டுக் கொடுத்துள்ளார். கடந்த 3 வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் வீரர் ஜடேஜா தான். 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கேவில் மொத்த அணியும் திணறிய போது கூட ஜடேஜா சிறப்பாக ஆடினார். சிஎஸ்கேவின் டாப் வீரராக ஜடேஜா திகழ்ந்து வருகிறார்.

முறைப்படி பார்ம் அடிப்படையில் பார்த்தால் ஜடேஜாவிற்குத் தான் சிஎஸ்கேவில் அதிக தொகை கொடுக்க வேண்டும். அவர் வருங்கால சிஎஸ்கே கேப்டனாகும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவே ஜடேஜாவிற்கு முதல் இடத்தை தோனி விட்டுக் கொடுத்தாக கூறப்படுகிறது.

அவரை முதல் வீரராக ரீடெயின் செய்யுங்கள், என்னை இரண்டாவதாக செய்தால் போதும் என்று ஜடேஜா குறித்து தோனி சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தோனி, ஜடேஜா போக சிஎஸ்கேவில் மொயின் அலி 8 கோடி ரூபாய்க்கும், ருத்துராஜ் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாகவே தோனி குறைந்த தொகைக்கு ரீடெயின் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஏலத்தின் போது ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ போன்ற வீரர்கள் மீண்டும் சிஎஸ்கேவில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.