ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி ரிலீசாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், எனவே அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், “செங்கோல் என்ற தலைப்பில் நான் கதை எழுதினேன். இக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய கதையை திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்த சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதை தான் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்தின் கதை என்னுடையது என்றும் அறிவிக்க வேண்டும்” என வருண் தெரிவித்திருந்தார்.

மேலும் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை, நீதிபதி எம்.சுந்தர் ஒப்புதலுடன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, படத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும் வழக்கு குறித்து அக்டோபர்.30-க்குள் பதிலளிக்க சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ், மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

இதுபோன்ற கதை திருட்டு விவகாரத்தில் முருகதாஸ் சிக்குவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2004ஆம் ஆண்டு வெளியான கஜினி படம், ஆங்கிலத்தில் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் ’மெமென்டோ’ என்ற படத்தின் தழுவல் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து கத்தி படத்தின் கதை, தன்னுடையது என்று எழுத்தாளர் மிஞ்சுர் கோபி வழக்குப் பதிவு செய்திருந்தார். ஆனால் அதை மறுத்த நிலையில், மிஞ்சுர் கோபயிடம் சமாதானம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது, மூன்றாவது முறையாக கதை திருட்டு விவகாரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சிக்கியுள்ளார்.

முன்னதாக, சர்கார் படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்படும் என்ற தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் முதலில் கூறப்பட்டு வந்தது. ஆனால், வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் படத்தை தீபாவளிக்கு முன்பாக வெளியிட்டால், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இதனால், படத்தை தீபாவளிக்கு முன்பாக வரும் நவம்பர் 2ம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்றும், படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.