வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 850 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சி அமைந்ததிலிருந்து சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 25 அதிகரித்தது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து 165 ரூபாய், அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு என்ற அத்தியாவசியப் பொருளின் விலையை ஆண்டுக்கு 46% என்ற அளவுக்கு ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று (ஆகஸ்ட் 17) மீண்டும் உயர்ந்துள்ளது. ரூ.850க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.875 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இதுபோன்ற விலையேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று இந்தியாவில் அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!