அசாம் மாநிலம், பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கிணற்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.

தலைநகர் குவஹாத்தியிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பக்ஜான். இந்த எண்ணெய் வயல் மாகுரி-மோட்டாபுங் சதுப்பு நிலத்திற்கு அருகே அமைந்துள்ளது. டிப்ரு-சைகோவா தேசிய பூங்காவின் சுற்றுச்சூழல் மண்டலமும் இங்குதான் அமைந்துள்ளது. நிறைய பறவைகள் வாழும் பகுதி இது.

இங்கு ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) இயற்கை எரிவாயு உற்பத்தி கிணறு உள்ளது. நேற்று பிற்பகல் தொடங்கிய தீயினால் எழுந்த புகை, 10 கி.மீ தூரத்தில் இருந்தும் பார்க்க முடிவதாகவும், இது அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிணற்றை சுற்றிலும் உள்ள சுமார் 2 கி.மீ பகுதிகளில் வசிக்கும் சுமார் 1600 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு வயல் பகுதியில் துப்புரவு பணிகள் நடைபெற்று வரும் போது தீப்பிடித்ததாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது. ஆயில் இந்தியா தனது அறிக்கையில், தீ விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்து ஆயில் இந்தியா மற்றும் ஓ.என்.ஜி.சி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்) குழுக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

மேலும் வாசிக்க: டிஜிட்டல் மூலம் நாங்கள் பிரசாரம் செய்வதை உங்களால் தடுக்க முடியாது.. அமித்ஷா விமர்சனம்

தீ விபத்து குறித்து அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NTRF) விரைந்துள்ளனர். இந்திய விமானப்படை மற்றும் ராணுவம், தீயணைப்பு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளன.

மேலும் அந்த இடத்தை சுற்றிலும் ராணுவம் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. தொடர் முயற்சிகளுக்கு பிறகும் தீ கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து எரிவாயு தீ விபத்து அணைப்பு வல்லுநர்கள் குழு அசாம் வரவுள்ளது.

இந்த கிணற்றை முழுவதுமாக மூடுவதற்கு நான்கு வாரங்கள் ஆகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எரிவாயு கிணற்றிலிருந்து, மே 27ம் தேதி எரிவாயு லீக் ஆக துவங்கியுள்ளது. கடந்த 14 நாட்களாக எரிவாயு கசிந்து வருகிறது. நேற்று முதல் தான் நெருப்பு வெளிப்பட்டுள்ளது. இதனால் இந்த பிராந்தியத்தின் சதுப்பு நிலங்கள், விவசாயம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பக்கத்து கிராமங்களில் நெல் வயல்கள், குளங்கள் மாசுபட்டுள்ளன. ஒவ்வொரு நாளிலும் இப்பகுதிக்கு, அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பல சிறு தேயிலை விவசாயிகள் தங்கள் தேயிலைத் தோட்டங்களில் எண்ணை கிணறு தீ விபத்தின் தாக்கம் இருப்பதால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க: அசாமில் கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்