இரு வாரத்துக்கு முன்னர் தமிழகத்தின் பிரதான ஊடகவியலாளர்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார்கள். மரியாதை நிமித்த சந்திப்பு என்று சொல்லப்பட்ட அதுகுறித்துப் பொதுவெளியில் பல்வேறு யூகங்கள். இதனை அங்கே கலந்து கொண்ட விகடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன் பார்வையில் இதோ :

” மாலை 6.19 மணிக்கு வந்தார் பிரதமர் மோடி. `வணக்கம்’ என்றபடி அமர்ந்தார். அவருக்கு அருகே அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அமர்ந்தனர். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பின்னர் கலந்துரையாடலில் இணைந்தனர்

‘அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கவே விருப்பம். ஆனால், அன்றாடப் பணிகளுக்கிடையே அது சாத்தியமில்லை என்பதால், இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தேன். தமிழக ஊடகங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்துப் பேசலாம். அலுவல்ரீதியாக இல்லாமல் மனம் விட்டுப் பேசுங்கள். ஆனால், இங்கு பேசுவது எல்லாமே ஆஃப் தி ரெக்கார்ட்’ என்று உரையாடலைத் தொடங்கினார் மோடி. `டிரெண்டிங் பதற்றம்’ முதல் 200 வருடப் பழைமையான நீர்த்தேக்கத் தொட்டி வரை கருத்துப் பரிமாற்றங்களால் நிறைந்த அந்த மாலை, ஒரு தேநீர் விருந்துடன் நிறைவு பெற்றது என்று முடித்து கொண்டார்

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட விஷயத்தை போட்டு உடைத்துள்ளார் இன்னொருவர் ..அவர் சொல்வதின் விவரம் இதோ:

மோடியுடன் சந்திப்பு தொடங்கியதுமே, இந்து குழுமத்தின் என் ராம், மோடி மீதான தன் விமர்சனங்களை அவர் முகத்துக்கு முன்பாகவே கூறுகிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பே நடத்தாத ஒரு பிரதமரை, இந்தியா இது வரை பார்த்ததே இல்லை. நாடெங்கும் பசு பாதுகாப்பு என்ற பெயரால் நடக்கும் கொலைகளை நீங்கள் கண்டிக்கத் தவறி விட்டீர்கள். மறைமுகமாக இத்தகைய கொலைகளை ஊக்கப்படுத்துகிறீர்கள் என்றதும், மோடியின் முக பாவனை மாறியது.

இந்து குழுமத்தின் பழைய செய்திகளை 2002ம் ஆண்டு முதல் எடுத்துப் பாருங்கள். எனக்கு எதிராகவே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். நான் எப்படியாவது தோற்க வேண்டும் என்று விரும்பினீர்கள். ஆனால் மக்கள் என்னை பிரதமராக்கினார்கள். அதையும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாததால்தான், நீங்கள் எனக்கு எதிராக வன்மத்தோடு எழுதி வருகிறீர்கள் என்றார்.

தற்போதைய இந்து நாளேட்டின் ஆசிரியர் முகுந்த் பத்மனாபன் இடைமறித்து, கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் மத்திய அரசு குறித்து சாதகமாக (Positive) எழுதி வருகிறோம் என்று கூறுகிறார்.

என்.ராம் அவரை இடைமறித்து, No No. Modi ji is right. Hindu group has a tradition of calling a spade a spade என்று கூறுகிறார் என்ற தகவலை வெளியிட்டு இருக்கும் அந்த இன்னொரு ஊடகவியாளரின் பெயர் சவுக்கு சங்கர்.. இதனால் ஊடக துறையிடனரிடம் பரபரப்பு கூடியுள்ளது ..