மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியாளர்களால் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் மத்திய பிரதேச மாநிலம் அமர்கந்தக் பகுதியில் அமைந்து உள்ளது. IGNTU என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மத்திய பிரதேசத்தில் தங்கி இந்த பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்நிலையில்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர்கள் கடந்த 10 ஆம் தேதி பாதுகாப்பு பணியாளர்களால் தாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மெயின் கேட் அருகே தண்ணீர் தொட்டி என்பது அனுமதி மறுக்கப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் அங்கு மாணவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மாணவர்களை பார்த்ததும் சத்தமிட்டதுடன் சரிமாரியாக தாக்குதலில் ஈடுபட தொடங்கி உள்ளனர். பாதுகாவலர்கள் நடத்திய தாக்குதலில் நசீல், அபிஷேக், அத்னான், ஆதில் ரஷிப் ஆகிய 4 கேரள மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு பணியாளர்கள் விளக்கமளித்து இருக்கின்றனர். மாணவர்களை தாக்கிய பாதுகாப்பு பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பிரதேச IGNTU பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கேரள பிரடெர்னிட்டி என்ற மாணவர் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரள மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை கண்டிக்கிறேன். மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு பணியாளர்களே தாக்கி இருக்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் தொடரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.