கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ள ‘கேரள சவாரி’ போன்ற ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை தமிழ்நாட்டில் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையில் முன்னணி நிறுவனங்களாக ஓலா, உபர் ஆகிய இரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் சமீப காலமாக இந்த இரு நிறுவனங்கள் மீதும் அதிக அளவிலான புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கேரளா அரசு ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே மேற்கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அரசு நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாகிவரும் நிலையில், தனியார் ஆதிக்கம் செலுத்தும் வாடகை டாக்ஸி துறையில் இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா நுழைந்துள்ளது.

கேரள மாநில தொழிலாளர் துறை சார்பில் ‘கேரள சவாரி’ என்று பெயரிடப்பட்ட ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையானது ஆட்டோ- டாக்ஸி நெட்வொர்க்குகளை இணைத்து தொடங்கப்படவுள்ளது. மலிவு விலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பிரச்சனை இல்லாத பயணத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த சேவை தொடங்கப்படவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கப்படும் இந்த திட்டத்தால் வாடகை டாக்ஸி உரிமையாளர்களுக்கு 20% அதிக லாபம் கிடைக்கும் என்றும், பொதுமக்களின் செலவுகளும் கணிசமாக குறையும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த துறையில் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்கும் நிலையில், அரசுக்கு லாபத்தை பெற்றுதரும் வகையில் கேரள அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ‘கேரள சவாரி’ என்னும் திட்டத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி வரம்புக்குள் இருக்கும் 500 ஆட்டோ- டாக்சி ஓட்டுனர்கள் இத்திட்டத்தின் முதல் டிரைவர் பார்ட்னராக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஓலா, உபர் போன்ற ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.