கேரளாவில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலமே வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன.

பல இடங்களில் மக்களை மீட்பதற்கு மீட்புப் படையினர் மற்றும் விமானப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கேரள மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் அண்டை மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.

கேரளா நிவாரண நிதியாக நடிகர் கமல்ஹாசன் ரூ. 25 லட்சமும், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சமும், நடிகர்கள் சங்கம் ரூ. 5 லட்சமும், நடிகர் விஷால் ரூ. 10 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், விஜய் சேதுபதி ரூ. 25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சமும், வழங்கி உள்ளனர்.

அதேபோல் நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சமும், நடிகை நயந்தாரா ரூ. 10 லட்சமும், நடிகை ஸ்ரீ ப்ரியா ரூ. 10 லட்சமும், நடிகை ரோகிணி ரூ. 2 லட்சமும், வழங்கியுள்ளனர். இதேபோல் தெலுங்கு நடிகர்களும் வழங்கி வருகின்றனர்.

நடிகர் சித்தார்த் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கியதோடு ட்விட்டரில், “நான் உனக்கு தைரியம் தருகிறேன், நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன். #KeralaDonationChallenge என்ற ஹேஷ்டேக்கில் நீங்களும் கேரளாவுக்கு உதவலாம்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் தனது ட்விட்டரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மீது தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நடிகை அமலா பால் ஷூட்டிங்கில் சண்டை காட்சி படமாக்கும்போது கை அடிபட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக கிளம்பியுள்ளார். அவரே நேரடியாக சென்று பொருட்கள் வாங்கி தரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.