பசுக்களை குளிர்கால குளிர்ச்சியிலிருந்து காப்பாற்ற சிறப்பு கோட்டுகளை வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுக்களின் நல்வாழ்வைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இந்துக்களுக்கு புனிதமாகக் கருதப்படும் பசுக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் கடமை என்று கூறிவருகிறார்.

இந்நிலையில் குளிர்கால மாதங்களில், மாநில அரசு நடத்தும் பசு முகாம்களில் உள்ள மாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கால்நடை பராமரிப்புத் துறை பல்வேறு மாவட்டங்களில் உள்ள கால்நடை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனையடுத்து சணல் பைகளால் செய்யப்பட்டு, மாடுகளை சூடாக வைத்திருக்கும் கோட்டுகளுக்கான ஏற்பாடுகளை தற்போது கால்நடை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாது, பசு முகாம்கள் குளிர்ந்த காற்று உள்ளே நுழையாதபடி தடிமனான பாலிதீன் திரைச்சீலைகள் அல்லது டார்பாலின் கொண்டு மூடப்பட்டிருக்கும். இதற்காக உபயோகிக்கப்படும் சணல் பைகள் மாவட்ட விநியோகத் துறையால் வழங்கப்படும்.

உத்தரப்பிரதேச மாவட்டங்களில் கால்நடைகளை கவனித்துக் கொள்வதற்கும், தீவனம் வழங்கப்படுவதற்கும் கிராமப்புறங்களில் பசு தங்குமிடம் செய்யப்பட்டுள்ளது. மாட்டு முகாம்களில் ஏற்பாடுகள் கிராம பஞ்சாயத்துகளின் மேற்பார்வையில் உள்ளன. மேலும் பணிக்கு பராமரிப்பாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

பசுக்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தவறாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாட்டு முகாம்களை ஆய்வு செய்வதும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் பாலியல் தொல்லை; பாஜக மகளிர் அணி செயலாளர் பகீர் புகார்