காஷ்மீரில் நேற்று (15.10.2021) நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 வீரர்களை காணவில்லை. துப்பாக்கி சண்டை நடந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு, காணாமல் போன 2 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. குறிப்பாக யங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (11.10.2021) பூஞ்ச் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் கடந்த வியாழக்கிழமை (15.10.2021) இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 ராணுவ வீரர்கள் காணாமல் போயினர்.

இந்நிலையில், துப்பாக்கி சண்டை நடைபெற்று 48 மணி நேரத்திற்குப் பிறகு, காணாமல் போன 2 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் தற்போது வரை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான ராணுவ வீர்களின் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவே சமீபநாட்களில் நடந்த என்கவுண்டர்களில் அதிகபட்ச உயிரிழப்பு ஆகும்.

இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரில் கடந்த 8 ஆம் தேதிக்குப் பிறகு 9 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.