சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கால்பந்து வீராங்கனை கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். மாவட்ட மற்றும் மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரியா, சமீபத்தில் கால் வலியால் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி இருப்பதாக கூறினர். இதனைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து பிரியாவின் கால் பெரிய அளவு வீங்கியது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நேற்று (14.11.2022) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.

மேலும் மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் கால் அகற்றப்பட்டதாகவும், அதுதான் அவரது உயிரை பறித்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி கதறி அழுதனர்.

மேலும் கவனக்குறைவாக உள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும். மேலும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.