வரும் கல்வியாண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது கட்டணம் செலுத்துகின்ற மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில், படிப்புகளில் சேர சென்றால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தையும், சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் உடன் திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பலமுறை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவுகள் பிறப்பித்தபோதிலும் உயர்கல்வி நிறுவனங்கள் அதனை உரிய முறையில் பின்பற்றாததால் தற்போது யுஜிசி இது தொடர்பான உத்தரவுகளை வழங்கியுள்ளது. மேலும் யுஜிசி நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுகின்ற கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும்.

அதன்படி கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனம் சார்ந்த படிப்புகள், கல்வி கட்டணம், சேர்க்கை விபரங்கள், நிர்வாக குழு, அங்கீகார விபரங்கள் அடங்கிய விபர புத்தகத்தை (prospectus) மாணவர்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

இது தொடர்பான முழு விபரங்களை கல்வி நிறுவனம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். அதில் புகார்கள் பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு வருகின்ற புகார்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

வரும் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக யுஜிசியின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

மாணவ மாணவியர் உயர் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்போது அசல் சான்றிதழ்களுக்கு பதிலாக சுய சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களை வழங்கினால் போதும். சேர்க்கை நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நிர்வாகம் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும்.

ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்ற பின்னர் சிறந்த படிப்புகளுக்காக வேறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்கின்ற பட்ட, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவர்களின் சான்றிதழ்களை வைத்திருக்க கூடாது.

செமஸ்டர் கட்டணம் அல்லது ஓராண்டுக்கான கல்வி கட்டணம் மட்டுமே முன்கூட்டியே பெற வேண்டும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணத்தையும் முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள் பெறக்கூடாது.

மாணவர் சேர்க்கை நிறைவு பெறுவதற்கு கடைசி தேதிக்கு 15 நாட்கள் இருப்பின், அப்போது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் தருவாயில் அந்த மாணவர் செலுத்திய முழு கட்டண தொகையையும் நிர்வாகம் திரும்ப வழங்க வேண்டும். செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ₹5 ஆயிரம் செயல்பாட்டு கட்டணமாக பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை நிறைவு பெற 15 நாட்கள் இல்லையெனில் 90 சதவீதமும், கடைசி தேதி முடிந்து 15 நாட்கள் கடந்துவிட்டால் 80 சதவீதமும், 16 முதல் 30 நாட்கள் கடந்துவிட்டது எனில் 50 சதவீதமும் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்டால் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டியது இல்லை. அதே வேளையில் பாதுகாப்பு சார்ந்த டெபாசிட் தொகை செலுத்தியிருந்தால் அதனை திரும்ப வழங்க வேண்டும். எழுத்து பூர்வமாக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ெதாகை திரும்ப வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மானியம், உயர் கல்வி மானியம் ரத்து செய்யப்படும். சிறப்பு திட்டங்களுக்கு யுஜிசி உதவி செய்வது நிறுத்தப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விளம்பரங்களாக வெளியிடப்படும். கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தனியார் பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிகளை பின்பற்றாமல் போனால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் எனில் மாநில அரசுக்கும் யுஜிசியால் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.