சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

இவருக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் மதுரையை சேர்ந்த உதவி பேராசிரியர் ஒருவர் இரவு நேரங்களில் விடுதிக்குச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதுகுறித்து குறிப்பிட்ட மாணவி விடுதியில் உள்ள பெண் வார்டன்கள் இருவரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பேராசிரியருக்கு ஆதரவாக அந்த இளம்பெண்ணிடம் பேசி, அவரது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி சென்னையில் உள்ள பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். வாழவச்சனூர் விரைந்து வந்த பெண்ணின் தந்தை ஊர் மக்களிடம் வருத்தத்தினை தெரிவித்தார். இதன் காரணமாக மாணவிக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கல்லூரியை முற்றுகையிட்டு, கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.

மக்கள் தெருவில் இறங்க திருவண்ணாமலை டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் வேளாண் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

குறிப்பிட்ட உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு ஆதரவாக விடுதி வார்டன்கள் தன்னிடம் செல்போனில் பேசிய பேச்சுக்களை இம்மாணவி பதிவு செய்துள்ளார். அதை தனது தந்தை வாயிலாக ஆதாரமாக கல்லூரி முதல்வரிடம் வழங்கியுள்ளார். இதற்கிடையில் உதவி பேராசிரியர் தலைமறைவாகி விட்டார்.

பெண் வார்டன்களிடம் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். அதேசமயம் மாணவர்கள் புதனன்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி இன்று காலை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜராகி மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் பாலியல் புகார் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் இதுபற்றி மாவட்ட முதன்மை நீதிபதி புகழேந்தி நிருபர்களிடம் கூறும்பொழுது, ‘குருவாக செயல்பட வேண்டிய குறிப்பிட்ட பேராசிரியர் மாணவியிடம் நடந்து கொண்ட செயல் வேதனை அளிக்கிறது. மாணவியின் குற்றச்சாட்டுகள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.