கர்நாடகா மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு இடங்களில் பஜ்ரங் தளம் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா (வயது 26) நேற்று (20.2.2022) இரவு 10 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனையடுத்து மெக் கேன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹர்ஷாவின் உடல் ஷிவமொகாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு நகரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற பஜ்ரங் தளம் அமைப்பினர் வன்முறையிலும் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து ஷிவமொகா, பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகரப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கொலைப்பட்ட ஹர்ஷாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இச்சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் அரக ஞானேந்திரா, “ஹர்ஷா ஓர் இந்து மத செயற்பாட்டாளர். அவர் ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார். ஷிவமோகா மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். எங்களுக்கும் ஹர்ஷா படுகொலை வேதனையைத் தருகிறது. ஆனால் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது சரியாகாது” என்று கூறினார்.