தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி 100 கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 
கஜா புயல் தாக்கி 28 நாட்கள் ஆகியும் பேராவூரணி சுற்றுவட்டாரத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
இதனை கண்டித்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் மின்சாரம் இன்றியும், மரங்கள் விழுந்ததால் வீடுகள் சேதமடைந்த நிலையில், தங்குவதற்கு மிகவும் அவதியுற்று வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
 
இதுவரை எந்த அதிகாரிகளும் வரவில்லை என்றும், முழுமையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் கூறியுள்ளனர்.
 
மேலும் தென்னை விவசாயிகளுக்கு குறைவான நிதி வழங்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி அறந்தாங்கி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதனை தொடர்ந்து புயலால் சேதமடைந்த தென்னை, மா, பலா, வாழை விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.