நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

இது 22.87% வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி இருந்ததை விட 22.87% குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும்.
  • அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37-க்கு விற்கப்பட வேண்டும்.
  • ஆனால்,  சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87% குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன

உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விலையும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதேவிலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய சந்தை விலை முறையே பெட்ரோல்  ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

 

2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது.

இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு.

இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியுமா என மோடி அரசை கண்டித்து சமூக வலைதளத்திலே  பலரும் பதிவு செய்து வருகின்றனர்