தமிழக அரசின் பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர் பெரியசாமி வீட்டில் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ரகசிய டைரி சிக்கியது.
அதில் தேதி வாரியாக பணம் கொடுத்தது அம்பலமாகியது.தமிழக அரசின் பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர் பெரியசாமியின் நாமக்கல் வீடு, கல்லூரி, சென்னை, விழுப்புரத்தில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், ₹14.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த வியாழன் முதல் சனிக்கிழமை வரை பெரியசாமிக்குச் சொந்தமான பிஎஸ்கே நிறுவனத்தில் அதிரடி சோதனை தொடர்ந்தது.
இந்தச் சோதனையில் ₹113 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியசாமியின் நாமக்கல் அலுவலகத்தில் ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில், சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கான விடுதிகள், விழுப்புரம் சட்டக்கல்லூரி, புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி, ஊட்டியில் பொரியியல் கல்லூரி, எம்ஜிஆர் சமாதி முன்பு பறக்கும் குதிரை உள்ளிட்ட ஏராளமான பணிகளை பொதுப்பணித்துறையில் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக தமிழகத்தில் முக்கிய விஐபி மற்றும் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததை தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார்.
இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த டைரி குறித்து விசாரணை நடத்தினால், தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். ஆனால், வரி ஏய்ப்பை பெரியசாமி ஏற்றுக் கொண்டதால், வரி ஏய்ப்புக்கான அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்தார். இதனால், பெரியசாமி வீட்டில் கிடைத்த ஆவணங்கள் குறித்து டெல்லி தலைமையகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர்.
டெல்லி அதிகாரிகள், ஏய்ப்புக்கான அபராதத்தை செலுத்த உத்தரவிட்டனர். இதனால் டைரி குறித்து தற்போதைய நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை.
ஆனால் பின்னர் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பீதியில் உள்ளனர்.