இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைப் பொது இயக்குநர் சுகாதோ சென் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறிய விவரம் பின்வருமாறு :

9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சென்ற ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை சரிவைக் கண்டுள்ளது. அம்மாதத்தில் 2,90,960 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் விற்பனையான 2,99,066 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 2.7 சதவிதம் குறைவு. மேலும், உள்நாட்டு சந்தைகளில் கார் விற்பனையும் 1,92,845-லிருந்து குறைந்து 1,91,979-ஆகி உள்ளது .

அதேசமயம், இருசக்கர வாகன விற்பனை 8.17 சதவீதம் அதிகரித்து 18,17,077-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 29.65 சதவீதம் அதிகரித்து 76,497-ஆக காணப்பட்டது.

ஒட்டுமொத்த அளவில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை ஜூலையில் 20,79,204 என்ற எண்ணிக்கையிலிருந்து 7.97 சதவீதம் உயர்ந்து 22,44,875-ஆனது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதற்கு பிறகு கடந்தாண்டு அக்டோபரில் சிறிய அளவில் குறைந்த பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் தான் கணிசமான சரிவை சந்தித்தது. இருப்பினும், தற்போதைய சூழலை கருத்தில் கொள்ளும் போது வாகன துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அது சாதகமானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத கால அளவில் 1 கோடி வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த நிதி ஆண்டின் உற்பத்தி அளவான 93 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத வளர்ச்சியாகும் என்றார்.