இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி முடிவடைந்தன. தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெறாத தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இணைய வழியில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. அனைத்து முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை காரணமாகத் தேர்வை எழுதாத மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்” என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்- தமிழக அரசு