வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியது. அதை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதனால் சமீப காலங்களில் பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வந்தன.

இதுகுறித்து பேசிய வாகன ஓட்டிகள், வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவிப்பு பற்றி தெரியவில்லை என்றும், இது குறித்து முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் இந்தாண்டு ஜூலை வரை 38,491 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதில் 15,601 விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளன.

அதில் 7,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2,476 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இனி ஹெல்மெட் அணியாவிட்டால் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.