இந்தியாவின் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியா கொரோனா பெருந்தொற்றில் சிக்கித் திணறிவருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இன்னும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாமல், தடுப்பூசி தட்டுப்பாடு என்ற அவலநிலையே உள்ளது.

மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு கவலையளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. இறப்புகள் அதிகரித்துள்ளன.

முதலாவது அலையை விட இரண்டாவது கொரோனா அலை மிகவும் ஆபத்தாக உள்ளது. அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவின் கொரோனா பாதிப்புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து உதவி வருகிறது.

அதேபோல் நேபாளம் , இலங்கை , வியட்நாம் , கம்போடியா , தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவிட் -19 ஏற்கெனவே உலகெங்கிலும் 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பறித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம்,

பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்குதல் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதுதான் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.

‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை