தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்க தடை என எச்சரிக்கைவிடுத்த சிறிது நேரத்தில், ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறப்பது எப்போது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பள்ளி இறுதி தேர்வு நடைபெறாத நிலையில் 1முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகள், இன்டெர்நெட்வழிக் கல்வி மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்புக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

எனினும் பேட்டி அளித்த சிறிது நேரத்திலேயே தனது நிலைப்பாட்டை அமைச்சர் மாற்றிக் கொண்டுள்ளார். ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தக்கூடாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது- சிங்கப்பூர் அதிரடி ஆய்வு முடிவு