ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, கங்குலி மற்றும் பிரபலங்கள் பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா டகுபதி, சுதீப் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அதிக நபர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இதில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதுவரை 13 பேர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த இரு நாட்கள் முன்பு கோவையில் ஒரே நாளில் 2 பேர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது சர்ச்சையாகியது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் உட்பட பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.

இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்து சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும். தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கூறி, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், அந்த விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, தமன்னா, சுதீப் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது உத்தரவில், ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு.. யார்.. கணக்கிற்கு செல்கிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக் கோரி திடீர் வழக்கு…