ஆந்திர மாநிலம் ஏலூரு பகுதியில் அதிகரித்து வரும் மர்ம நோயின் காரணம் குறித்து, ஆய்வு செய்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளின் ரத்தத்தில் அதிக அளவு ஈயம், நிக்கல் கலந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலுரு என்ற நகரின் பல இடங்களில் இதுவரை 570 பேர் மர்ம நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டடவர்கள் அனைவரும், சாதாரணமாக இருக்கும் சமயத்திலேயே மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்து வருகின்றனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினர், அரசு அதிகாரிகளும் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மர்ம நோய் குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மருத்துவக்குழு மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்பட பல மருத்துவ குழுவினர் நோய் பாதிப்பு அதிகமுள்ள ஏலுருவில் முகாமிட்டுள்ளனர்.

நோயாளிகளின் ரத்தம் எடுக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில், “ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கல் அதிக அளவில் கலந்துள்ளது. இந்த நோய் ஒரு மர்மமான நோயாக உள்ளது. நிக்கல் மற்றும் ஈயம் (Lead) எந்த மூலங்களிலிருந்து வந்திருக்கும் என்பது குறித்து கண்டறிய இன்னும் அதிக சோதனைகள் தேவைப்படுகின்றன.

இந்த உலோகங்கள் பால் மற்றும் தண்ணீரில் கலந்திருக்கின்றனவா என ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த நோய் பரவலின் காரணம் குறித்து மேலும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஏலூருவில் திடீரென பரவும் மர்ம நோய்; பொதுமக்கள் பீதி