நாடு முழுவதும் ஜூலை 01 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டுவரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக, பயணிகள் ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 200 ரயில்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நாடு முழுவதும் தற்போது அட்டவணைப்படி இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் என அனைத்து விதமான ரயில் சேவைகளும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கவும் தற்போதைக்கு அனுமதியில்லை எனக் கூறியுள்ளது.

மேலும், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயண டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கான முழு கட்டணமும் பயணிகளுக்கு திரும்ப தரப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடாமல் உள்ளதன் காரணமாக, ரயில்வே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..