யோகி பாபு எமததார்மனாக நடித்திருக்கும் தர்ம பிரபு படம், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பதை கதையாகக் கொண்டு தயாராகியுள்ளது இப்படம்.

இப்படத்தில் பகுத்தறிவு கருத்துக்களை தூக்கிப்பிடிக்கும் வகையிலும் பெரியார், அம்பேத்கர், நேதாஜியை பெருமை படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன.

மேலும் அரசியல்வாதிகளை கலாய்த்தும், அதிமுக அரசைக் கலாய்த்தும் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக அரசின் ராஜகுருவாக பார்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை பகடி செய்து காட்சிகள் இருக்கிறது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தும் பல காட்சிகள் படத்தில் உள்ளன. இதற்கு அக்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில நாட்கள் முன் தர்மபிரபு படம் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டது. இது பாஜக ஆதரவாளர்களின் செயலாக பார்க்கப்பட்டது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது, தற்போது அதனைத் தாண்டி இந்து அமைப்புகள் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்து மதக் கடவுள்களையும் இந்து மத மரபுகளையும் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள தர்ம பிரபு திரைப்பட குழுவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் இதுபோன்ற தவறான கருத்துக்களை திரைப்படத்தில் இருந்து நீக்காமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்ட சென்சார் போர்டு அதிகாரிகளை கண்டித்தும், இந்து முன்னணி பேரியக்கத்தினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகமெங்கும் இப்படத்திற்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. ஒரு புறம் இது படத்திற்கு கிடைக்கும் பெரிய விளம்பரமாக சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.