சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திருச்சுழி தங்கம் தென்னரசு (திமுக) கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய விவரம் பின்வருமாறு ” தற்போது ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தல் சமயத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருவோம்’ என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஶ்ரீதர், சித்திக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவும் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளித்துவிட்டது. இந்த அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது சஸ்பென்ட், இடமாறுதல், போலீசார் மூலம் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. நாங்கள் முதல்வரை கேட்டுக் கொள்வதெல்லாம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளை, வழக்குகளை திரும்ப பெற்று சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும்.
அவர்களின் முக்கிய கோரிக்கையே, ‘முதல்வர் எங்களை அழைத்து பேச வேண்டும்’ என்பது தான். அவர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு எந்த செலவும் ஆகாது.
அதனால் முதல்வர், அவர்களை உடனே அழைத்து பேச வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள எல்லா நடவடிக்கைகளையும் திரும்ப பெற்று பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” என்றார்
இதே கருத்தை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை குளச்சல் பிரின்ஸ் (காங்கிரஸ்) பேச்சின் விவரம் பின்வருமாறு ” அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசஊழியர்கள், ஆசிரியர்களிடம் மாதம் மாதம் பணம் வசூலிக்கப்படுகிறது. அந்த பணம் எங்கு செல்கிறது என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராடும் நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவரகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்த அரசு கைவிட வேண்டும். அவர்களை மீண்டும் போராட வைக்கும் நிலையை உருவாக்கக்கூடாது. அவர்களை முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதற்கு பதிலளித்து மீன்வளம், பணிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அவர்களை பல்வேறு முறை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழகத்தின் நிதி சுமை காரணமாக உங்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்று பலமுறை எடுத்து கூறப்பட்டது.
ஆனாலும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போது மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்ட முறையே நடைமுறையில் உள்ளது.
அரசுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதி சுமையால் பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனாலும் 22.01.2019 முதல் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் மொத்தம் உள்ள 7,41,857 பேரில் சுமார் 2,10,500 பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது 28 சதவீதமே ஆகும். உயர்நீதிமன்றமும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியது. திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் என்று நீதிமன்றமும் அறிவுறுத்தியது.
பொதுத்தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்ற காரணத்தால் சில நடவடிக்கைகளை வேறு வழியில்லாமல் எடுக்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கையை அரசிடம் நிதி இல்லாததால் ஏற்க முடியாது என்று பத்திரிகையிலும் செய்தி வெளியிடப்பட்டது. ஆனாலும் அவர்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதுபோன்ற சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கைது செய்வது காவல் துறையினரின் வழக்கம். தற்போது 30.01.2019 முதல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது அரசு ஆராய்ந்து முடிவு செய்யும். நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றார்