டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றார் ராபர்ட் வதேரா
 
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை முடிந்து ராபர்ட் வதேரா புறப்பட்டு சென்றார்.
 
சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
 
டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு
கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
 
அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் வாங்கி உள்ள சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
 
மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அது உண்மையா என அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
 
ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.
 
இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக்கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.
 
காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். சுமார் 9 மணி வரை நேரம் விசாரணை நீடித்தது.
 
இந்தநிலையில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை முடிந்து ராபர்ட் வதேரா புறப்பட்டு சென்றார். கடந்த 3 நாளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வதேராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.