தமிழகத்தில் இன்றைக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்றும். அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த சூப்பர் புயலான ஆம்பன் பெரிய அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் சேதங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதன் தாக்கம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்புயல் தமிழகத்தில் பெரிய சேதங்களை ஏற்படுத்தாவிட்டாலும், ஆம்பன் புயல் ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொண்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வட மாவட்டங்களில் இயல்பை 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்..ஆம்பன் புயலின் கோரத்தாண்டவம்

மேலும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 23 மற்றும் 24ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று கூறியுள்ளது.

இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயில் சதமடித்தது. தமிழகத்தில் சென்னை உட்பட 9 இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது. நேற்று சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் வேலூரில் 41.8 டிகிரி செல்சியசும், கடலூரில் 41 . 4, புதுச்சேரியில் 41.2, பரங்கிப்பேட்டையில் 40 . 5, ஈரோட்டில் 40 .4, நாகப்பட்டினத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இத்துடன், மன்னர் வளைகுடா பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.