தன்னுடைய கேரியரை பேட்ஸ்மேனாக துவக்கி, பின்பு பௌலராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் அஜித் அகர்கர். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை பார்த்து சச்சின் டெண்டுல்கர் தனக்கு அவருடைய க்ளவுசை பரிசாக அளித்ததாக அகர்கர் தற்போது தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அஜித் அகர்கர், சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர். ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதுடன் 3 அரைசதங்களையும் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய இவர் 109 ரன்களை குவித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பள்ளியில் படித்தவர் என்ற பெருமை அஜித் அகர்கருக்கு உண்டு. இதேபோல சச்சினை போலவே பயிற்சியாளர் ராமகந்த் ஆச்ரேகரின்கீழ் பயிற்சி பெற்றவர் அகர்கர்.

மேலும் வாசிக்க: தோனி உடன் விளையாடினால் எளிதாக இருக்கும்- இளம் சுழற்பந்துவீச்சாளர்

42 வயதாகும் அகர்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி யூடியூப் ஷோவில் பங்கேற்று தன்னுடைய பல்வேறு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ராமகந்த் ஆச்ரேகரின் அகாடமியில் இருந்து வெளிவந்து சிறப்பாக விளையாடிய அகர்கரை அடுத்த டெண்டுல்கர் என்று ரசிகர்கள் அப்போது பெயரிட்டனர்.

முதலில் பேட்டிங்கிலேயே கவனம் செலுத்திய அகர்கர், பின்பு பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டதையும் வெளிப்படுத்தியுள்ளார். அஜித் அகர்கரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து, சச்சின் டெண்டுல்கர், அவருக்கு தனது க்ளவுசை பரிசாக அளித்ததையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரை தான் முழுமையாக அறியாமல் இருந்ததாகவும், அவரை தான் சரியாக தொடரவில்லை. சச்சினை முழுமையாக பின்பற்றி ஆடியிருந்தால், தான் இன்னும் சிறப்பான பேட்ஸ்மேனாக வந்திருக்க முடியும் என்றும் அகர்கர் தெரிவித்துள்ளார்.