பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால் ஏராளமான நடிகர்களின் படங்கள் வரும் போது, திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகின்றன.

அந்த வகையில் வரும் பொங்கல் 2019ல் ரஜினி நடிப்பில் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம், சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி ஆகிய படங்கள் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “விஸ்வாசம்”. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

ரஜினி நடிப்பில் 2.0 படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் “பேட்ட” படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். பேட்ட படமும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் ரேஸில் ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்துள்ளார். விஸ்வாசம், பேட்ட படத்தோடு “எல்.கே.ஜி.” படமும் வெளிவர இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

எல்.கே.ஜி. படத்தில் அரசியல் பேசுகிறார் பாலாஜி. அதனால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து படத்தை ஹிட்டாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

மரியாதைக்குரிய அரசியல்வாதிகள், பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் 3 படங்கள் மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் நிச்சயம் சிக்கல் எழும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தான் உரிய தீர்வளிக்க வேண்டும் என்று திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.