அரசியல் இயற்கை கருத்துக்கள் சுற்றுச்சூழல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பிற்கு எதிராக திமுக சார்பில் ஜனவரி 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு என மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசின் அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறுகளை தோண்ட வேண்டும். இதற்கு அப்பகுதி மக்களின் கருத்துகளையும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியமாக இருந்தது.

இதனால் ஹைட்ரோ கார்பன் குறித்த திட்டங்களை மத்திய அரசு அறிவித்தால் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு இனி சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி வாங்க தேவையில்லை; பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாய அமைப்புகளும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி. 22 வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் துரோகமாக திமுக இதைக் கருதுகிறது. பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்.

அதே நேரம் அவரது அமைச்சரவையில் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருக்கும் கருப்பண்ணன், அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி கோரிக்கை வைக்கிறார். விவசாயிகளை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்ற கபடநாடகத்தை நடத்துகிறது அதிமுக அரசு என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் ஆணையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க கோரி ஜனவரி 28 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்” என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து திருவாரூரில் உள்ள திரு.வி.க. கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.