ஹிஜாப் விவகாரம் என்பது எங்களுடைய உள்நாட்டு பிரச்சினை; இது சம்பந்தப்பட்ட எந்த கருத்தையும் பிற நாடுகளிலிருந்து வரவேற்க விரும்பவில்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஒரே சீருடை சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என இந்துத்துவா மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’என முழக்கம் எழுப்பியதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 6 நாட்களாக ஹிஜாப் விவகாரம் கர்நாடகா முழுவதும் பூதாகரமாகி, இந்துத்துவா அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 16 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஹிஜாப் தொடர்பாக வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு குறித்து வரும் 15.2.2022 அன்று விசாரணை நடைபெற உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் 10.2.2022 இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11.2.2022 அன்று வழக்கு தொடரப்பட்டது.ஆனால் இந்த வழக்கை உடனடி விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு நாடுகளும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றன.

ஹிஜாப் ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் தெரிவித்துள்ள கருத்தில், “படிப்புகளுக்கும் ஹிஜாபுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், ஹிஜாப் விவகாரத்தில் ‘அல்லா ஹூ அக்பர்’ என்ற மண்டியா மாணவி முஸ்கானுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், ஹிஜாப் அணிந்த மாணவி முஸ்கானின் படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் புரொஃபைல் படமாக வைத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபோன்று சர்வதேச அளவில் ஹிஜாப் ஆதரவு குரல்கள் எழுந்து வரும் நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் வெளிநாட்டுகள் கருத்து சொல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹிஜாப் விவகாரம் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை விசாரணையில் உள்ளது இது எங்களுடைய உள்நாட்டு விவகாரம்.

இது சம்பந்தப்பட்ட எந்த கருத்தையும் பிற நாடுகளிலிருந்து வரவேற்க விரும்பவில்லை இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பு, ஜனநாயக நெறிமுறைகளின்படி ஹிஜாப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.