ஜம்மு- காஷ்மீரில் இன்று பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

ஜம்மு- காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் பொது மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து வேலைக்காகச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தாக்குதல் நடத்துபவர்களை உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் பாதுகாப்புப்படையினர் தேடி வேட்டையாடி வருகின்றனர். கடந்த 5 ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 08) மாலை ஸ்ரீநகரில் உள்ள போஹ்ரி கதல் பகுதியில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.