வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று (29.11.2021) அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில், “இன்று (29.11.2021) அதிகாலை 4.17 மணி அளவில் வேலூரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 59 கி.மீ. தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.