வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களுடன் வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 33 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்து தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. இதுவரை மத்திய அரசு, விவசாயிகள் சங்கங்களுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து, வரும் டிசம்பர் 29 ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் கடந்த 27 ஆம் தேதி அறிவித்தன.

இந்நிலையில், வேளாண் சட்டம் தொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை டெல்லியில் உள்ள விக்யன் பவனில் மதியம் 2 மணிக்கு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டிசம்பர் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; விவசாய சங்கங்கள்