உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், தனது மகன் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யோகி தலைமையிலான பாஜக அரசின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிச் செல்லும் வீடியோவை நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தக் கொடூர சம்பவத்தை உள்ளூர் பத்திரிகையாளர் ராமு காஷ்யப் என்பவர் தான் எடுத்துள்ளார். இவர் சாத்னா பிரைம் நியூஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போது தான் பாஜகவினரின் கார்கள் விவசாயிகள் மீது ஏறிச் சென்றதைக் கண்டு அதிர்ந்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பத்திரிகையாளர் ராமு காஷ்யப் காணவில்லை.

பின்னர் அடுத்தநாள் மருத்துவமனையின் பிணவறையில் தான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நிலையில் சிகிச்சையில் சேர்ந்ததாகவும், சிகிச்சைக்குப் பின்னர் ராமு காஷ்யப் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மகன் ராமு காஷ்யபை சுட்டுக் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் தனது மகன் கொலைக்கு உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டும் எனவும் அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறையால் பெரும் பதற்றம் நிலவும் வேளையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான் தனது காரை விவசாயிகள் மீது ஏற்றி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆகவே ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், மேலும் அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ராவை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.