சிங்கு எல்லைப் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக நிஹாங் சீக்கிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்தது தங்களுக்கு எந்தவித வருத்தமும் அளிக்கவில்லை என்று நிஹாங் அமைப்பினர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், 15.10.2021 அன்று லக்பீர் சிங் (வயது 35) என்ற தலித் சீக்கியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பேரிகார்டில் தொங்கவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலைக்கு நிஹாங் சீக்கிய குழு பொறுப்பேற்றுள்ளது. சீக்கிய மதத்தின் புனித நூலை அவமதித்ததால் லக்பீர் சிங்கை கொன்றதாக தெரிவித்துள்ளது. இந்த கொலை தொடர்பாக நிஹாங் அமைப்பைச் சேர்ந்த சரவ்ஜித் சிங் என்பவர் நேற்று மாலை (15.10.2021) காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, லக்பீர் சிங்கை கொலை செய்தது தனக்கு எந்தவித வருத்தமும் அளிக்கவில்லை என்றும், புனித நூலை அவமதித்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் சரவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். அவரை 7 நாளில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று (16.10.2021) நிஹாங் அமைப்பைச் சேர்ந்த மற்றொருவர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், இன்று மாலையில் நிஹாங் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை ஹரியானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிஹாங் அமைப்பின் சக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதையுடன் அனுப்பி வைத்தனர். மூத்த உறுப்பினர் ஒருவர், அவர்கள் இருவரின் காலைத் தொட்டு வணங்கி விடை கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சீக்கியர்களின் புனித நூலை லக்பீர் சிங் அவமதித்ததாக கூறி, நிஹாங் அமைப்பினர் அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த நிஹாங் சீக்கிய அமைப்பினர்..

நிஹாங் ஒரு சிறிய சமூகமாகும். இந்த கொடூர குணமுடைய நிஹாங் சீக்கிய அமைப்பினர் வழக்கமான சீக்கியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். நீல நிற உடைகள், கையில் ஈட்டிகள் மற்றும் வாள்கள், நீலநிற அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் இவர்களின் அடையாளமாகும்.

நிஹாங் குழுவினர் ஒரு போர் வீரர்கள் குழு என்றே அழைக்கப்படுகிறார்கள். நிஹாங் குழுவினர் அடிக்கடி இதுபோல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாட்டியாலாவில் உள்ள தேராவில் நிஹாங் சீக்கிய குழுவினர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிலரை கொடூரமாக தாக்கினார்கள்.

இந்த ஆண்டு ஜூலையில் நிஹாங் சீக்கியர்கள் லூதியானாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக கூறி, ஒருவரை நிஹாங் அமைப்பினர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.