விமல்- வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிட சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. விமல்- வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு, ஷகீலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. சில காரணங்களால் வெளியாகவில்லை. முன்னதாக கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்காக தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.

இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் நவம்பர் 27 வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை மீடியா டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும்,

தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘கன்னிராசி திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

நெட்ஃபிளிக்ஸின் முதல் தமிழ் ஆந்தாலஜி ‘பாவகதைகள்’ டீஸர் வெளியீடு