உலகம் தேசியம்

ராணுவ ஆட்சியால் மியான்மரில் வலுக்கும் போராட்டம்; எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்திய இந்தியா

ராணுவத்திற்கு பயந்து மியான்மரில் இருந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதால், அவர்களை தடுத்க இந்திய எல்லைகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆங் சாங் சூக்கி உட்பட முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மியான்மரில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூக்கியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஆங் சாங் சூக்கி ஆட்சியை கவிழ்த்து ராணுவத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு நாட்டில் இணையதள மற்றும் வங்கி சேவைகள் முடக்கப்பட்டன. அரசு தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், சூச்சி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர். இதுவரை ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பதற்றமான சூழலில், மியான்மரில் இருந்து போலீசார் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த போலீஸ்காரர்களை அந்த மாநில போலீசார் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால் தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் இருந்து மேலும் பல போலீசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லைகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மியான்மரில் இருந்து 30 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்படுமா அல்லது மியான்மருக்கு அனுப்பி வைக்கப்படுவார்களா? என்பது தொடர்பாக மத்திய அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 54 பேர் உயிரிழந்தது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், ராணுவத்தினரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவுத் தலைவர் மிஷல் பலசெட் மியான்மர் ராணுவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மியான்மரில் ராணுவத்தின் அத்துமீறல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இரு நாட்டு ராணுவ தாக்குதல்களின் போது காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களை தாக்கக் கூடாது என்பது ஐ.நா.வின் விதி.

ஆனால் இந்த விதியைமீறி மியான்மர் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ ஊழியர்களும் ராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளனர். உலகில் மனித உரிமை மீறல் எங்கு நடந்தாலும் அதனை எதிர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதற்கு உலக நாடுகள் இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா கழுதை இறைச்சி.. ஆந்திராவில் களைக்கட்டும் கழுதை விற்பனை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.