பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.1,600 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான போர் விமானங்களை கொள்முதல் செய்வதில் அரசின் கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
ஆனால் ரஃபேல் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் என்பதால், இதை பகிரங்கமாக வெளியிட இயலாது என்று மோடி அரசு மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் எங்களது கைகளுக்கு வந்தவுடன் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாவதால் ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையடுத்து மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பாஜக அரசு மீதான ரஃபேல் போர் விமான ஒப்பந்த 36000 கோடி ஊழல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட விஷயம் பிரத்மர் மோடிக்கும் பாதுகாப்பு மந்திரிக்கும் பெரும் பின்னடைவு என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன

முன்னதாக ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக மோடி அரசின் மீதே குற்றம் சாட்டி பாஜகவின் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் வெளியிட்ட முழு அறிக்கை விவரம் ( நன்றி வினவு )