பிரதமர் மோடி ஸ்டன்ட் மாஸ்டர் என்றும், எடப்பாடி பாதுகாவலர் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
 
இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மோடி இந்தியாவின் கதாநாயகன். இந்தியாவை பாதுகாக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்.
 
இந்தியாவிற்கு பிரச்னை என்றால் அதை மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மல்யுத்த வீரர். டி.டி.விக்கு பொதுச்சின்னம் கொடுக்க வாய்ப்பு இல்லை, கொடுக்கவும் கூடாது , அவர் அனுதாபத்தால் ஓட்டு வாங்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் அவரை மதிக்க மாட்டார்கள்.மேலும் டி.டி.வி.தினகரன் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார்.
 
மேலும் பேசிய அவர் அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. யாரிடமும் விற்கவில்லை. அதிமுகவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம் என்றார்.
 
பின்னர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் அருப்புக்கோட்டையில் நேற்றிரவு நடந்தது.
 
இதில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை அறிமுகப்படுத்தி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ‘‘பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் மலரும். மோடியை ‘டாடி’ என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.
 
தேசத்தை பாதுகாப்பதில் மோடி முன்னணியில் இருக்கிறார். அதனால் தந்தை, டாடி என்று சொல்வது பொருத்தமானது. இதில் எந்த தவறும் கிடையாது. இதை கிண்டல், கேலி செய்கிறார்கள். முக்கியமாக, பாஜ தான் தமிழகத்தை காக்கிறது’’ என்றார்.