வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஆம்பன் சூப்பர் புயல் இன்று கரையை கடந்தது. ஆம்பன் புயலால் இதுவரை மேற்கு வங்கத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இந்த ஆம்பன் புயல் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறியது. அதாவது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அளவுக்கு வலுவான புயலை சூப்பர் புயல் என்பார்கள்.

புயல், அரபிக் கடலில் இருந்து குளிர்மையான காற்றை இழுக்கிறது. எனவே, தென் கர்நாடகா, வடக்கு கேரளா, வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பதிவானது.

மேலும் வாசிக்க: அந்தமான் அருகே மத்திய வங்கக் கடல் பகுதியில் ‘ஆம்பன் புயல்’- சென்னை வானிலை மையம்

ஆம்பன் புயலானது, வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து மேற்குவங்கத்தின் சாகர் தீவுகள், வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.

இதனிடையே, சூப்பர் புயலாக வலுபெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வந்த ஆம்பன் அதிதீவிர புயலாக வலுவிழந்தது. தொடர்ந்து, மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மெதினாபூர் மாவட்டம் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளின் சுந்தர்பன் இடையே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கியது.

சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து ஆம்பன் புயல் கரையை கடந்த போது, மணிக்கு 160 – 170 கிலோமீட்டருக்கு மேலாகக் காற்று வீசியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.

முன்னதாக, மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சுமார் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் இருந்து 1.58 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

[su_carousel source=”media: 13903,13904″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”3″ speed=”0″]

எனினும், இப்புயலால், மேற்குவங்கம், ஒடிசா மாநிலத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றமடைந்து சுமார் 5 மீட்டருக்கு மேலாக அலைகள் மேலே எழும்பியது. பலத்த காற்று, கனமழை காரணமாக மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. மின்கம்பங்கள் அறுந்து விழுந்தன. மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தொடர்ந்து 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் வீதிகளில் மிகப் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொன்டு வருகின்றனர். ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 3 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.