ராட்சசி படத்தை பாராட்டிய மலேசிய அமைச்சருக்கு நடிகை ஜோதிகா படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ராட்சசி. இப்படம் அரசு பள்ளி மற்றும் அதன் கல்வி நிலை எப்படி உள்ளது என்பதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை குவிக்காவிட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே நேரத்தில் படத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன், ‘இப்படத்தில் அரசு பள்ளிகளை கேவலப்படுத்தியும், அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் பாராட்டு தெரிவித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். இதனை சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, படத்தில் காட்டியதுபோல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். உங்களின் பாராட்டு எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இப்படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இப்படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இப்படம்.

இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இப்படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.