கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை முழு கல்விச் செலவு, தொடக்கத்தில் ரூ.3 லட்சம் நிதியுதவியும், 18 வயதுவரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையின் பரவல் சற்று குறைந்துள்ளது. ஆனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர்.

இந்த குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றன.

ஏற்கனவே ஹரியானா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி, மாத ஊக்கதொகை வழங்குவது குறித்து அறிவித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸால் மாநிலத்தில் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குச் சென்ற குழந்தைகளுக்காக சிறப்பு உதவித்திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது அவசியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

அதன்பின் 18 வயதுவரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,166 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாஸிட்டிவ் சதவீதம் 17.87 ஆக குறைந்துள்ளது. 181 பேர் உயிரிழந்துள்ளனர். பத்தினம்திட்டா, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அதைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- AICTE