சாத்தான்குளத்தில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை மிரட்டியதால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மாலையிலேயே புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ்-தந்தை ஜெயராஜ், இருவரும் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த மரணம் தொடர்பான விசாரணையை உதவி காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் இருவரும் தடுக்க முயன்றதாக மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் நேற்று (ஜூன்.30) காலை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், திடீரென செவ்வாய்க்கிழமை (ஜூன்.30) மாலை தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான விசாரணையைத் தடுக்க முயன்றதாக அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஏ.எஸ்.பி. டி.குமார் மற்றும் டி.எஸ்.பி பிரதாபன் இருவருக்கும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.

ஏ.எஸ்.பி. குமார் நீலகிரி மாவட்டம் தடை அமலாக்க பிரிவு ஏ.எஸ்.பி.யாகவும், டி.எஸ்.பி பிரதாபன் புதுக்கோட்டை மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவில், “காலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணையின்போது நீதிபதியை மிரட்டும் வகையில் செயல்பட்டதாக, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் காட்டி இருந்தால் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்காது” என கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: நீதிபதி பாரதிதாசன் விசாரணை அறிக்கை

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மொத்தம் 39 காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் பணியிடத்துக்கு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுவரை மகேஷ் குமார் அகர்வால் வகித்துவந்த சென்னை காவல் துறை, செயலாக்க பணிகள் பணியிடத்துக்கு ஏ.கே. விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ளார்.

பெண்கள் -குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்துவந்த எம். ரவி, ஈரோட்டில் உள்ள சிறப்புப் பணிகள் பிரிவு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தென் சென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த பிரேமானந்த் சின்ஹா மதுரையின் புதிய காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல மதுரை நகர காவல்துறை ஆணையராக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் சென்னை காவல்துறை தொழில்நுட்ப சேவையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கூடுதல் ஆணையராக இருந்த எச்.எம். ஜெயராம் திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ், சென்னை நகர கூடுதல் ஆணையர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரகத்தின் டிஐஜி பி.சி. தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 39 காவல்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.