தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில், கடந்த 2018 மே மாசம் 22 ஆம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம். போலீஸை மட்டும் குறை சொல்வது தவறு” எனத் தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதில், இதுவரை 22 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 544 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதைதவிர, 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ரஜினிகாந்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால், ஆஜராகும்போது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள். அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும்.

எனவே கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் எனக் கூறி, ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு ரஜினி கோரி இருந்தார். ஆனால் ஆணையம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தற்போது, 23வது கட்ட விசாரணை கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், அருணா ஜெகதீசன் விசாரணை நடந்தி வருகிறார். சம்மன் அனுப்பப்பட்டவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்துள்ளார்.

ஆளும் அதிமுக அரசின் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் ரெய்டு; ரூ.700 கோடி ஆவணங்கள் மீட்பு